எண்ணங்கள்

Wednesday, August 09, 2006

விளம்பர கூத்து

இன்று தமிழ்நாட்டில் தெரியும் டி.வி.க்களில் ப்ரோக்ராம் வருகிறதோ இல்லையோ, ஆனால் விளம்பரங்கள் நிறைய வருகின்றன. சரி வருகிறது, பார்க்கலாம் என்று பார்த்தால், எல்லாமே ப்ரோக்ராமை விட கேவலமான டப்பாவாக வருகிறது.

விளம்பரம் என்பது, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காக இருக்க வேண்டும். ஆனால் புகழ் பெற்ற சில தமிழ் சேனல்களில் வரும் சில விளம்பரங்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. எங்கே இந்த விளம்பரங்களால், அந்த விளம்பரம் கொடுத்தவர்களின் வியாபாரம் பின்னுக்கு சென்றுவிடுமோ என்று.

இன்றைய பெரும்பாலான விளம்பரங்கள், எதாவதொன்றின் அசல் காப்பியாகத்தான் இருக்கிறது. அது மட்டுமல்ல, சஸ்பென்ஸ் தருகிறேன் பேர்வழி என்று கவுண்டவுன் வேறு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். "மாமுவ கடிச்ச நாய் எதுன்னு தெரியனுமா, காத்திருங்கள் இன்னும் 5 நாள்" - இவ்வாறாக போய் கொண்டிருக்கிறது கவுண்டவுன் கூத்து. இதற்காக சில பல ஆயிரங்களை தாராளமாக அள்ளி இறைக்கிறார்கள்.

அடுத்த வகையான விளம்பர கூத்து என்னவென்றால், புகழ் பெற்ற நடிகரின் குரலை மிமிக்ரி செய்து விளம்பரப்படுத்துவது. ஒரு காமெடி நடிகர் கேள்வி கேட்பார், அதற்கு எதாவதொரு ஹீரோ நடிகர் பதில் சொல்வது போல், அந்த ப்ராண்டுதான் சிறந்தது என்று சொல்வார். இவ்வாறாகவும் ஒரு ட்ராக் போய்க்கொண்டிருக்கிறது.

மற்றொரு வகையான விளம்பர உத்தி, விளம்பரம் கொடுக்கும் நிறுவன உரிமையாளரின் பையன் அல்லது குழந்தைகள்தான் மாடல்கள். அவர்கள் அப்போதைய பரவலாக பேசப்படும் எதாவதொரு விசயத்தை அப்படியே இமிடேட் செய்து, எதோ உளரி, இதுதான் விளம்பரம் என்பார்கள். அதையும் பார்த்து வெந்து சாவது என்னவோ நாம்தான்.

இதே வகையில் வரும் ஆனால் வேறு மாதிரியான விளம்பரங்கள், அப்போதைய பரவலாக பாடப்படும் பாடலை அப்படியே எடுத்து, வரிகளை மட்டும் மாற்றி அப்படியே நைஸாக, விளம்பரமாக தருகிறார்கள்.

இது போல் போய்க்கொண்டிருந்தால், மக்கள் விளம்பரங்களுக்கு பயந்தே நிகழ்ச்சியையும் பார்க்காமல் விட்டு விடுவார்கள். எத்தனையோ விளம்பரங்கள் க்ரியேடிவ்வாக வந்து கொண்டிருக்கையில், அதை பார்த்தாவது இது போன்ற டப்பா விளம்பரங்களை தரும் நிறுவனங்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

இன்றைய தேதியில், விளம்பரங்கள் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டதால், அதை கொஞ்சம் சுவாரஸ்யமாக, புதிய சிந்தனைகளுடன் கொடுத்தால் மக்கள் மத்தியில் பிரபலமாவதோடு இல்லாமல் நல்ல வியாபாரத்திற்கு வழி வகுத்து, அதன் நோக்கமும் நிறைவேறியது போல இருக்கும்.

இப்படிக்கு,
நல்ல விளம்பரங்களை எதிர்பார்த்து, வெந்து நொந்தவர்களில் ஒருவன்.

0 Comments:

Post a Comment

<< Home