எண்ணங்கள்

Sunday, November 09, 2008

நொறுங்க தின்றால் நூறு வயது. ??!!

எனக்கு நினைவிருக்கிறது, மேற்சொன்ன பழமொழிக்கு "(சாப்பிடக் கூடிய பொருள்களை) எதனையும் அறுவறுப்பு படாமல் சாப்பிட்டால் ஆயுசு அதிகம்" என்பதுதான் பொருள் என்று என் தமிழ் வாத்தியார் எட்டாம் வகுப்பில் சொல்லிக்கொடுத்தார்.


ஆனால் இப்பொழுது அதை சொன்னால் என் நண்பர்கள் சிலர் அதனை மறுக்கின்றனர். அதற்கு பொருள் எதனையும் நன்றாக நொறுக்கி அரைத்து சாப்பிட வேண்டும் என்பதுதான் பொருள் என்று கூறுகின்றார்கள்.

எது சரி.? விபரம் அறிந்தவர்கள் கூறினால் நன்றாக இருக்கும்.

Monday, May 07, 2007

எங்கள் டி.வி யுடன் ஒரு முப்பது நிமிடம்.

நான் இந்த கட்டுரை எழுதும் பொழுது நாள் மே மாதம் ஏழாம் தேதி 2007 ம் வருடம். மணி இந்திய நேரப்படி இரவு 10:19 ஆகின்றது. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் பின்நாட்களில் நான் இங்கு சொல்லியிருப்பது மாறியிருக்கலாம். ஆதலால் சமகாலத்தை வைத்து இதனை படிப்பவர்கள் குழம்ப தேவையில்லை.

சரி விஷயம் இதுதான். நான் இன்று இரவு சுமார் ஒரு 8:20 க்கு டி.வி யை ஆன் செய்து பார்த்துகொண்டிருந்தபோது என்னென்ன பார்த்தேன் என்பதைத்தான் இங்கு சொல்ல போகின்றேன். முதலில் நான் டி.வி யை ஆன் செய்த போது நல்ல வேலையாக எச்.பி.ஓ சேனல் ஓடிக்கொண்டிருந்தது. அதுவே நான் பின்பு பார்க்க நேர்ந்த தமிழ் சேனல்களில் எதாவது ஒன்றாக இருந்திருந்தால் டி.வியானது அப்பொழுதே அணைக்கப்பட்டிருக்கும்.

அப்படியே ரிமோட்டின் சேனல் மாற்றும் பட்டன்களில் மேல் பட்டனை அழுத்தினேன். அது ஒரு தமிழ் சேனல் அதில் க்ஸோஸ்-அப் பில் ஒரு முகத்தை காண்பித்து கொண்டிருந்தார்கள். அந்த முகம் ஆக்ரோஷமாக எதோ பேசிக்கொண்டிருந்தது. அடுத்த சில விநாடிகளில் இன்னொரு முகத்தை காண்பித்தார்கள். அது முந்தைய முகம் பேசியதை சற்று கலவரத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. புரிந்துவிட்டது அது ஏதோ மெகா சீரியல் என்று. (இந்த மெகா சீரியல்களில் மட்டும் ஏன்தான் எல்லாரது முகத்தையும் மிக அருகே காண்பித்து எரிச்சலூட்டுகிறார்களோ தெரியவில்லை.)

அடுத்த சேனலுக்கு தாவினால் அதுவும் தமிழ் சேனல்தான் அதிலும் எதோ ஒரு மெகா சீரியல் தான். ஆனால் இதில் ஏதோ ஹாலிவுட் ரேஞ்சு காட்டுகிறேன் பேர்வழி என்று நடு ரோட்டில் ஒரு அடிதடியை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த ஒரு தமிழ் சேனல். அதில் 24 மணிநேரமும் யாராவது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். பேசி பேசி உறவுமுறையே கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள். நடுநடுவே பாடலும் வருகிறது. ஆனால் ஹிட்டான எதோ ஓரு பாடலை மறுபடி மறுபடி ஒலி/ஒளி பரப்பி அதனை அலுத்துப் போக செய்துவிடுகிறார்கள். லேட்டஸ்ட்டாக மாம்பழம் மட்டும் தான் அதில் எந்நேரமும் அரை பட்டுக் கொண்டிருக்கிறது.

மற்றொரு தமிழ் சேனலில் படங்களை கிடைக்காத பஞ்சபாட்டில் இருப்பதை போல ஒரு டப்பிங் படம் அல்லது எதோ ஒரு ஓடாத ஒட்டடை அடைஞ்ச படத்தை மட்டுமே போடுகிறார்கள். அது கண்டிப்பாக ஒரு இருநூறு முறை இதற்கு முன்பு காட்டப்பட்டிருக்கும். அந்த படத்தின் தரமும் சரியில்லை, அதன் ஒளிபரப்பும் சரியில்லை. நான் எதோ டி.வியில் தான் சத்தம் இல்லையோ என்று அதனை நோண்ட ஆரம்பித்துவிட்டேன்.

இது சும்மா எடுத்துக்காட்டுக்கு ஓரிரண்டு சேனல்களின் கதைதான். ஆனால் தமிழ் சேனல்கள் அனைத்துமே இந்த குறுகிய வட்டத்துக்குள்தான் கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு படம் ஹிட்டானால் அதே பாணியில் அடுத்து ஒரு 15 படம் வரும் என்ற கதை தமிழ் சினிமாவில் மட்டுமில்லை. டி.வி யிலும் தான். ஒரு நிகழ்ச்சி ஹிட்டானால் கொஞ்சம் கூட கூச்சமின்றி அதனை மற்ற அனைத்து சேனல்களும் காப்பியடித்து தூள்பரத்துகின்றன. கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கின்றன. டி.வி க்கும் தணிக்கை கண்டிப்பாக தேவையென்று நினைக்கின்றேன். ஆனால் இந்த கூட்டத்தில் அத்தி பூத்தாற் போல் சில சேனல்கள் நல்ல சுவையுள்ள நிகழ்ச்சிகளை வழங்குகின்றன என்றால் அது உண்மையே.

நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள். ஒரு 8 தமிழ் சேனல்களுக்கிடையே ஒரு 10 நிமிடம் வலம் வந்தால் பின்வருபவனவற்றை காணலாம். ஒரு பாடல், இரண்டு மூன்று அழுகை சீன்கள், இரண்டு சேனல்களில் யாராவது 'உங்க டி.வி வால்யூமை குறையுங்கள்' என்று போனில் கத்தி கொண்டிருப்பார்கள், கண்டிப்பாக இரண்டில் 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' என்று விளம்பரம் ஓடும். இவற்றில் அனைத்துமோ அல்லது மாறி மாறியோ வந்து போகும். கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது.

இன்னும் இந்த தமிழ் சேனல்களை நன்றாக திட்டி தீர்க்க வேண்டும் போல் உள்ளது. ஆனால் தூக்கம் என்னை தடுக்கிறது. ஆ.....வ்....... குட்...நைட்....

Monday, August 14, 2006

கையெழுத்திட்டு உறுதியளி

தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்துவிட வேண்டாம். அட்டஸ்ட் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்னவென்று அகராதியில் பார்த்தபொழுது, இதுதான் இருந்தது. அப்படியே தலைப்பாக வைத்துவிட்டேன். ஹி...ஹி...

சரி விஷயத்துக்கு வருவோம். நான் என்னுடைய டிகிரி சான்றிதழ் வாங்க விரும்பி, அதற்கு விண்ணப்பிக்கும் வேலைகளில் இறங்கினேன். அதில் ஒன்றான என்னுடைய டிப்ளமோ சான்றிதழின் நகலை ஒரு கெஸட்டட் ஆபிசரின் அட்டஸ்டெட் உடன் அனுப்ப வேண்டும். யாராவது ஒரு அரசு மருத்துவர், வக்கீல் அல்லது எதாவதொரு பள்ளிகூட தலைமை ஆசிரியர் இவர்களில் யாரிடமாவது வாங்கலாம்.

நான் மருத்துவரிடம் வாங்கலாம் என்று நினைத்து எங்கள் ஊரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றேன். என் ஊர் திண்டுக்கல்.

நான் போன நேரம் மதியம் ஒரு மூன்று அல்லது நான்கு மணி இருக்கும். மருத்துவமனையில் அவசர பிரிவில் ஒரு டாக்டர் இருப்பார், அவரிடம் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். நானும் சென்று வெளியில் காத்திருந்தேன். வராந்தாவிற்கு வெளியே சற்று அருகில் ஓரமாக நின்றிருந்தேன். உள்ளே மூன்று நர்ஸ்கள் இருப்பது தெரிந்தது. அவர்கள் மூவரும் தீவிரமாக எதையோ யோசித்து யோசித்து பயங்கரமாக ஆலோசனையெல்லாம் செய்து எழுதிக்கொண்டிருந்தார்கள். நானும் சரி எதோ மருத்துவமனை சமாசாரம் போல, எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என நினைத்தேன்.

கம்பவுண்டர் வந்தார். எங்க ஊர்ல யாராவது வெள்ளை பேண்டு சட்டை போட்டிருந்தால், அவரை கம்பவுண்டர் என்போம் அல்லது பேங்க் ப்யூன் என்போம். அது ஆஸ்பத்திரி அல்லவா, அதனால் அவர் கண்டிப்பாக கம்பவுண்டர் தான். (ஏன்? பேங்க் ப்யூன் ஆஸ்பத்திரிக்கு வந்திருக்க கூடாதா?... வந்திருக்கலாம் தான். இப்போதைக்கு நமக்கு அது முக்கியமில்லை, விஷயத்துக்கு வருவோம்)

அந்த "வெள்ளை சட்டை பேண்டு" அருகில் வந்து என்ன என்று கேட்டார்.
"அட்டஸ்டேஷன் வாங்கணும்".
"கொஞ்சம் இருங்க, டாக்டர் பேஷண்ட் பார்த்துட்டு இருக்கார்". சொல்லிவிட்டு போய்விட்டார்.

ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை அந்த கம்பவுண்டர் எங்களை கடந்து வந்துபோய்க் கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் "இருங்க இருங்க" என்று சொல்லி விட்டு போய்விடுவார்.

உள்ளே மூன்று நர்ஸ்களின் தீவிரம், யோசனை, ஆலோசனை எல்லாம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது.

டாக்டர் வார்டிலிருந்து அவர் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சரி இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்த வேலை முடிந்துவிடும். சென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருவழியாக கம்பவுண்டர் வந்து எங்களை உள்ளே கூப்பிட்டார். போகும் வழியில் அந்த மூன்று நர்ஸ்களின் டேபிள்களையும் கடந்துதான் போனேன்.
டாக்டரிடம் சென்று விஷயத்தை சொல்லி, அட்டஸ்டெட் கேட்டால், "நான் போடறதில்லை, வேறு யார்கிட்டயாவது வாங்கிக்கங்க", என்று சொல்லிவிட்டார்.

"அட ச்ச.. இதுக்கா இவ்வளவு நேரம் காத்திருந்தோம்" என்று வெறுத்து போய் வெளியேறிக்கொண்டிருந்தேன். அந்த நர்ஸ்களின் டேபிளை கடந்த போது அப்படி அந்த தீவிரம், யோசனை, ஆலோசனை என்னவாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் டேபிளை சற்று கூர்ந்து பார்த்துக்கொண்டே கடந்தேன்.

மூன்று பேரும் ஆளுக்கு ஒன்றாக பென்சிலால் கட்டம் போட்டு அன்றைய ஹிந்துவில் வந்திருந்த "சுடோகு" கட்டத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

"ச்ச..."

Wednesday, August 09, 2006

பாடல் டெடிகேஷன் கூத்து

வர்ணணையாளர்/வர்ணணையாளினி : ஹலோ, வணக்கம் சொல்லுங்க, உங்க பெயர் என்ன.?

நேயர் : நான் பேட்டையில இருந்து <அவர் பெயரை சொல்லி> பேசுறேங்க.

வ/வ : அப்படியா...ஹா....ஹா.... (சிரிப்பு...) சொல்லுங்க, நீங்க என்ன பண்றீங்க.?

நேயர் : நான் உங்க கிட்ட ஃபோன்ல பேசிட்டு இருக்கேன்... (பெரிய ஜோக் சொல்லிவிட்ட
நினைப்பில் இவர் ஒரு முறை ஹி,...ஹி என்று சிரிக்க... உடனே சிரித்து வைக்க வேண்டுமே என்று உடனே வ/வ வும் ஹ்ம்..ஹ்ம்... என்று கஷ்டப்பட்டு சிரித்து வைப்பார்.)

வ/வ : இல்ல, நீங்க என்ன பண்றீங்க, படிக்கிறீங்களா... வேலை பாக்குறீங்களா..

நேயர் : நான் வேலை பாக்குறேன், இங்க பக்கத்துல, எலட்ரிக் கடையிலதான் வேலை பாக்குறேன்.

வ/வ : வேலையெல்லாம் எப்படி போகுது.

நேயர் : ம்ம்... நல்லா போகுதுங்க.

வ/வ : சரி உங்களுக்கு எந்த பாடல் வேணும்.

நேயர் : எனக்கு வசூல்ராஜா படத்துல இருந்து சீனா, தானா பாட்டு போடுங்க... இத

வ/வ : நீங்க கேட்ட பாடல் வந்துகிட்டே இருக்கு... கேட்டு என்ஜாய் பண்ணுங்க.

நேயர் : மேடம்... மேடம் ஒரு நிமுசம்.

வ/வ : ம்ம்.. சொல்லுங்க.

நேயர் : இந்த பாட்ட நான் டெடிகேசன் பண்றேன்.

வ/வ : யாருக்காக....

நேயர் : இது என் வொய்ஃப், என் குழந்தைங்க அப்புறம் அம்மா, அப்பா வுக்கு...

வ/வ : ரொம்ப நன்றி பாடல் வந்துகிட்டே இருக்கு...

இது நான் சமீபத்தில் ஒரு F.M ல் கேட்ட உரையாடல். இந்த உரையாடலை படித்தவுடன் இந்த கட்டுரையின் தலைப்பின் கடைசியில் ஏன் கூத்து என்று வைத்தேன் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.

என்னங்கயா இது கொடுமையா இருக்கு, சீனா, தானா பாட்டை யாரோ எழுதி, யாரோ மியூசிக் போட்டு , யாரோ பாடி, யாரோ ரெக்கார்டு பண்ணி, யாரோ லட்சக்கணக்கில முதல் போட்டு வெளியீடு பண்ணினா இவங்க, நோகாம டெடிகேட் பண்றென்னு சொல்லிட்டு போயிடுறாங்க.
அதகூட ஏத்துக்கலாம். ஆனா, சீனா தானா பாட்டை யாராவது, அம்மா அப்பாக்கு, பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு டெடிகேட் பண்ணுவாங்களா...

இந்த பாடலை கேட்ட நேயர், டெடிகேஷன்னா என்ன என்று தெரியாமல் கூட அதை அப்படி சொல்லியிருககலாம். ஆனால் அதை திருத்த வேண்டியது வ/வ க்களின் கடமையும்க்கூட தானே...

ஒரு நாளில், 10 மணிநேரம் F.M ஓடுகிறது என வைத்துக்கொண்டால், அதில் எட்டு மணி நேரம் யாராவது யாருடனாவது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை கொஞ்சம் பயனுள்ளதாக பேசிக்கழித்தால் நன்றாக இருக்குமே.

ஆனால் அதே நேரத்தில், ஒரு நேயர் இதேபோல பேசிவிட்டு, கடைசியில் எனக்கு "தெற்கு தெரு மச்சான்" படத்துல் இருந்து "லொக்கு லொக்கு லொக்கு இருமலு..." பாட்டை போடுங்கனு கேட்டார். அதே மாதிரி அவரோட ஃப்ரண்ட் ஒருத்தரோட பெயரை சொல்லி அவருக்கு டெடிகேட் பண்றேன்னு சொன்னார். காரணம் கேட்டதுக்கு, "இல்லீங்க, அவன் ரொம்ப சிகரெட் குடிப்பான் அதுக்காகத்தான்" அப்படினு சொன்னார். அடடா, இதுவல்லவோ நல்ல டெடிகேசனுக்கு அழகு என்று தோன்றியது.

மற்றுமொரு நேயர், "எம். குமரன்" படத்துல இருந்து, "நீயே, நீயே" சாங் போடுங்க, எங்க அம்மாவுக்கு இன்னைக்கு பிறந்த நாள் அதனால அவங்களுக்கு இந்த பாட்டை டெடிகேட் பண்றேன்னு சொன்னார். அதுவும் நன்றாகத்தான் இருந்தது.

சரி அது இருக்கட்டும், இதே வரிசையில், காதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் வருகிறது. அதற்கு நிறைய பேர் கடிதம் மற்றும் ஃபோன் மூலமாக அமோக ஆதரவு தெரிவிக்கின்றனர். சரி கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதில் கவிதையையும் சந்தடி சாக்கில் எழுதி அனுப்பி வைக்கிறார்கள். அவ்வாறு சமீபத்தில் நான் கேட்டு ரசித்த(!!!!) கவிதைகளில் ஒன்று.

"பூமி சூரியனை சுற்றுவது இயற்கை விதி,
நான் உன்னை சுற்றுவது எனது விதி,
நம் இருவரையும் உன் அண்ணன் சுற்றுவது எவனோ செய்த சதி"

இந்த கவிதையை வாசித்துவிட்டு, வ/வ சொன்ன அடுத்த வரி இதுதான் - "இந்த அழகான கவிதை எழுதிய அனுப்பிய (அனுப்பியவரின் பெயரை சொல்லி) என்பவருக்காக அடுத்த பாடல் வந்துகொண்டிருக்கிறது. "

விளம்பர கூத்து

இன்று தமிழ்நாட்டில் தெரியும் டி.வி.க்களில் ப்ரோக்ராம் வருகிறதோ இல்லையோ, ஆனால் விளம்பரங்கள் நிறைய வருகின்றன. சரி வருகிறது, பார்க்கலாம் என்று பார்த்தால், எல்லாமே ப்ரோக்ராமை விட கேவலமான டப்பாவாக வருகிறது.

விளம்பரம் என்பது, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காக இருக்க வேண்டும். ஆனால் புகழ் பெற்ற சில தமிழ் சேனல்களில் வரும் சில விளம்பரங்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. எங்கே இந்த விளம்பரங்களால், அந்த விளம்பரம் கொடுத்தவர்களின் வியாபாரம் பின்னுக்கு சென்றுவிடுமோ என்று.

இன்றைய பெரும்பாலான விளம்பரங்கள், எதாவதொன்றின் அசல் காப்பியாகத்தான் இருக்கிறது. அது மட்டுமல்ல, சஸ்பென்ஸ் தருகிறேன் பேர்வழி என்று கவுண்டவுன் வேறு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். "மாமுவ கடிச்ச நாய் எதுன்னு தெரியனுமா, காத்திருங்கள் இன்னும் 5 நாள்" - இவ்வாறாக போய் கொண்டிருக்கிறது கவுண்டவுன் கூத்து. இதற்காக சில பல ஆயிரங்களை தாராளமாக அள்ளி இறைக்கிறார்கள்.

அடுத்த வகையான விளம்பர கூத்து என்னவென்றால், புகழ் பெற்ற நடிகரின் குரலை மிமிக்ரி செய்து விளம்பரப்படுத்துவது. ஒரு காமெடி நடிகர் கேள்வி கேட்பார், அதற்கு எதாவதொரு ஹீரோ நடிகர் பதில் சொல்வது போல், அந்த ப்ராண்டுதான் சிறந்தது என்று சொல்வார். இவ்வாறாகவும் ஒரு ட்ராக் போய்க்கொண்டிருக்கிறது.

மற்றொரு வகையான விளம்பர உத்தி, விளம்பரம் கொடுக்கும் நிறுவன உரிமையாளரின் பையன் அல்லது குழந்தைகள்தான் மாடல்கள். அவர்கள் அப்போதைய பரவலாக பேசப்படும் எதாவதொரு விசயத்தை அப்படியே இமிடேட் செய்து, எதோ உளரி, இதுதான் விளம்பரம் என்பார்கள். அதையும் பார்த்து வெந்து சாவது என்னவோ நாம்தான்.

இதே வகையில் வரும் ஆனால் வேறு மாதிரியான விளம்பரங்கள், அப்போதைய பரவலாக பாடப்படும் பாடலை அப்படியே எடுத்து, வரிகளை மட்டும் மாற்றி அப்படியே நைஸாக, விளம்பரமாக தருகிறார்கள்.

இது போல் போய்க்கொண்டிருந்தால், மக்கள் விளம்பரங்களுக்கு பயந்தே நிகழ்ச்சியையும் பார்க்காமல் விட்டு விடுவார்கள். எத்தனையோ விளம்பரங்கள் க்ரியேடிவ்வாக வந்து கொண்டிருக்கையில், அதை பார்த்தாவது இது போன்ற டப்பா விளம்பரங்களை தரும் நிறுவனங்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

இன்றைய தேதியில், விளம்பரங்கள் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டதால், அதை கொஞ்சம் சுவாரஸ்யமாக, புதிய சிந்தனைகளுடன் கொடுத்தால் மக்கள் மத்தியில் பிரபலமாவதோடு இல்லாமல் நல்ல வியாபாரத்திற்கு வழி வகுத்து, அதன் நோக்கமும் நிறைவேறியது போல இருக்கும்.

இப்படிக்கு,
நல்ல விளம்பரங்களை எதிர்பார்த்து, வெந்து நொந்தவர்களில் ஒருவன்.