எண்ணங்கள்

Monday, August 14, 2006

கையெழுத்திட்டு உறுதியளி

தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்துவிட வேண்டாம். அட்டஸ்ட் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்னவென்று அகராதியில் பார்த்தபொழுது, இதுதான் இருந்தது. அப்படியே தலைப்பாக வைத்துவிட்டேன். ஹி...ஹி...

சரி விஷயத்துக்கு வருவோம். நான் என்னுடைய டிகிரி சான்றிதழ் வாங்க விரும்பி, அதற்கு விண்ணப்பிக்கும் வேலைகளில் இறங்கினேன். அதில் ஒன்றான என்னுடைய டிப்ளமோ சான்றிதழின் நகலை ஒரு கெஸட்டட் ஆபிசரின் அட்டஸ்டெட் உடன் அனுப்ப வேண்டும். யாராவது ஒரு அரசு மருத்துவர், வக்கீல் அல்லது எதாவதொரு பள்ளிகூட தலைமை ஆசிரியர் இவர்களில் யாரிடமாவது வாங்கலாம்.

நான் மருத்துவரிடம் வாங்கலாம் என்று நினைத்து எங்கள் ஊரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றேன். என் ஊர் திண்டுக்கல்.

நான் போன நேரம் மதியம் ஒரு மூன்று அல்லது நான்கு மணி இருக்கும். மருத்துவமனையில் அவசர பிரிவில் ஒரு டாக்டர் இருப்பார், அவரிடம் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். நானும் சென்று வெளியில் காத்திருந்தேன். வராந்தாவிற்கு வெளியே சற்று அருகில் ஓரமாக நின்றிருந்தேன். உள்ளே மூன்று நர்ஸ்கள் இருப்பது தெரிந்தது. அவர்கள் மூவரும் தீவிரமாக எதையோ யோசித்து யோசித்து பயங்கரமாக ஆலோசனையெல்லாம் செய்து எழுதிக்கொண்டிருந்தார்கள். நானும் சரி எதோ மருத்துவமனை சமாசாரம் போல, எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என நினைத்தேன்.

கம்பவுண்டர் வந்தார். எங்க ஊர்ல யாராவது வெள்ளை பேண்டு சட்டை போட்டிருந்தால், அவரை கம்பவுண்டர் என்போம் அல்லது பேங்க் ப்யூன் என்போம். அது ஆஸ்பத்திரி அல்லவா, அதனால் அவர் கண்டிப்பாக கம்பவுண்டர் தான். (ஏன்? பேங்க் ப்யூன் ஆஸ்பத்திரிக்கு வந்திருக்க கூடாதா?... வந்திருக்கலாம் தான். இப்போதைக்கு நமக்கு அது முக்கியமில்லை, விஷயத்துக்கு வருவோம்)

அந்த "வெள்ளை சட்டை பேண்டு" அருகில் வந்து என்ன என்று கேட்டார்.
"அட்டஸ்டேஷன் வாங்கணும்".
"கொஞ்சம் இருங்க, டாக்டர் பேஷண்ட் பார்த்துட்டு இருக்கார்". சொல்லிவிட்டு போய்விட்டார்.

ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை அந்த கம்பவுண்டர் எங்களை கடந்து வந்துபோய்க் கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் "இருங்க இருங்க" என்று சொல்லி விட்டு போய்விடுவார்.

உள்ளே மூன்று நர்ஸ்களின் தீவிரம், யோசனை, ஆலோசனை எல்லாம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது.

டாக்டர் வார்டிலிருந்து அவர் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சரி இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்த வேலை முடிந்துவிடும். சென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருவழியாக கம்பவுண்டர் வந்து எங்களை உள்ளே கூப்பிட்டார். போகும் வழியில் அந்த மூன்று நர்ஸ்களின் டேபிள்களையும் கடந்துதான் போனேன்.
டாக்டரிடம் சென்று விஷயத்தை சொல்லி, அட்டஸ்டெட் கேட்டால், "நான் போடறதில்லை, வேறு யார்கிட்டயாவது வாங்கிக்கங்க", என்று சொல்லிவிட்டார்.

"அட ச்ச.. இதுக்கா இவ்வளவு நேரம் காத்திருந்தோம்" என்று வெறுத்து போய் வெளியேறிக்கொண்டிருந்தேன். அந்த நர்ஸ்களின் டேபிளை கடந்த போது அப்படி அந்த தீவிரம், யோசனை, ஆலோசனை என்னவாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் டேபிளை சற்று கூர்ந்து பார்த்துக்கொண்டே கடந்தேன்.

மூன்று பேரும் ஆளுக்கு ஒன்றாக பென்சிலால் கட்டம் போட்டு அன்றைய ஹிந்துவில் வந்திருந்த "சுடோகு" கட்டத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

"ச்ச..."

0 Comments:

Post a Comment

<< Home