எண்ணங்கள்

Monday, May 07, 2007

எங்கள் டி.வி யுடன் ஒரு முப்பது நிமிடம்.

நான் இந்த கட்டுரை எழுதும் பொழுது நாள் மே மாதம் ஏழாம் தேதி 2007 ம் வருடம். மணி இந்திய நேரப்படி இரவு 10:19 ஆகின்றது. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் பின்நாட்களில் நான் இங்கு சொல்லியிருப்பது மாறியிருக்கலாம். ஆதலால் சமகாலத்தை வைத்து இதனை படிப்பவர்கள் குழம்ப தேவையில்லை.

சரி விஷயம் இதுதான். நான் இன்று இரவு சுமார் ஒரு 8:20 க்கு டி.வி யை ஆன் செய்து பார்த்துகொண்டிருந்தபோது என்னென்ன பார்த்தேன் என்பதைத்தான் இங்கு சொல்ல போகின்றேன். முதலில் நான் டி.வி யை ஆன் செய்த போது நல்ல வேலையாக எச்.பி.ஓ சேனல் ஓடிக்கொண்டிருந்தது. அதுவே நான் பின்பு பார்க்க நேர்ந்த தமிழ் சேனல்களில் எதாவது ஒன்றாக இருந்திருந்தால் டி.வியானது அப்பொழுதே அணைக்கப்பட்டிருக்கும்.

அப்படியே ரிமோட்டின் சேனல் மாற்றும் பட்டன்களில் மேல் பட்டனை அழுத்தினேன். அது ஒரு தமிழ் சேனல் அதில் க்ஸோஸ்-அப் பில் ஒரு முகத்தை காண்பித்து கொண்டிருந்தார்கள். அந்த முகம் ஆக்ரோஷமாக எதோ பேசிக்கொண்டிருந்தது. அடுத்த சில விநாடிகளில் இன்னொரு முகத்தை காண்பித்தார்கள். அது முந்தைய முகம் பேசியதை சற்று கலவரத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. புரிந்துவிட்டது அது ஏதோ மெகா சீரியல் என்று. (இந்த மெகா சீரியல்களில் மட்டும் ஏன்தான் எல்லாரது முகத்தையும் மிக அருகே காண்பித்து எரிச்சலூட்டுகிறார்களோ தெரியவில்லை.)

அடுத்த சேனலுக்கு தாவினால் அதுவும் தமிழ் சேனல்தான் அதிலும் எதோ ஒரு மெகா சீரியல் தான். ஆனால் இதில் ஏதோ ஹாலிவுட் ரேஞ்சு காட்டுகிறேன் பேர்வழி என்று நடு ரோட்டில் ஒரு அடிதடியை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த ஒரு தமிழ் சேனல். அதில் 24 மணிநேரமும் யாராவது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். பேசி பேசி உறவுமுறையே கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள். நடுநடுவே பாடலும் வருகிறது. ஆனால் ஹிட்டான எதோ ஓரு பாடலை மறுபடி மறுபடி ஒலி/ஒளி பரப்பி அதனை அலுத்துப் போக செய்துவிடுகிறார்கள். லேட்டஸ்ட்டாக மாம்பழம் மட்டும் தான் அதில் எந்நேரமும் அரை பட்டுக் கொண்டிருக்கிறது.

மற்றொரு தமிழ் சேனலில் படங்களை கிடைக்காத பஞ்சபாட்டில் இருப்பதை போல ஒரு டப்பிங் படம் அல்லது எதோ ஒரு ஓடாத ஒட்டடை அடைஞ்ச படத்தை மட்டுமே போடுகிறார்கள். அது கண்டிப்பாக ஒரு இருநூறு முறை இதற்கு முன்பு காட்டப்பட்டிருக்கும். அந்த படத்தின் தரமும் சரியில்லை, அதன் ஒளிபரப்பும் சரியில்லை. நான் எதோ டி.வியில் தான் சத்தம் இல்லையோ என்று அதனை நோண்ட ஆரம்பித்துவிட்டேன்.

இது சும்மா எடுத்துக்காட்டுக்கு ஓரிரண்டு சேனல்களின் கதைதான். ஆனால் தமிழ் சேனல்கள் அனைத்துமே இந்த குறுகிய வட்டத்துக்குள்தான் கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு படம் ஹிட்டானால் அதே பாணியில் அடுத்து ஒரு 15 படம் வரும் என்ற கதை தமிழ் சினிமாவில் மட்டுமில்லை. டி.வி யிலும் தான். ஒரு நிகழ்ச்சி ஹிட்டானால் கொஞ்சம் கூட கூச்சமின்றி அதனை மற்ற அனைத்து சேனல்களும் காப்பியடித்து தூள்பரத்துகின்றன. கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கின்றன. டி.வி க்கும் தணிக்கை கண்டிப்பாக தேவையென்று நினைக்கின்றேன். ஆனால் இந்த கூட்டத்தில் அத்தி பூத்தாற் போல் சில சேனல்கள் நல்ல சுவையுள்ள நிகழ்ச்சிகளை வழங்குகின்றன என்றால் அது உண்மையே.

நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள். ஒரு 8 தமிழ் சேனல்களுக்கிடையே ஒரு 10 நிமிடம் வலம் வந்தால் பின்வருபவனவற்றை காணலாம். ஒரு பாடல், இரண்டு மூன்று அழுகை சீன்கள், இரண்டு சேனல்களில் யாராவது 'உங்க டி.வி வால்யூமை குறையுங்கள்' என்று போனில் கத்தி கொண்டிருப்பார்கள், கண்டிப்பாக இரண்டில் 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' என்று விளம்பரம் ஓடும். இவற்றில் அனைத்துமோ அல்லது மாறி மாறியோ வந்து போகும். கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது.

இன்னும் இந்த தமிழ் சேனல்களை நன்றாக திட்டி தீர்க்க வேண்டும் போல் உள்ளது. ஆனால் தூக்கம் என்னை தடுக்கிறது. ஆ.....வ்....... குட்...நைட்....